வியாழன், 6 டிசம்பர், 2018

திருவானைக்கா திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நீர்த்தீரள்நாதர், ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அகிலாண்டநாயகி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

திருமுறை : மூன்றாம் திருமுறை 053 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
வானைக்காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை
தேனைக்காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதும் ஏதம் இல்லையே.

பொருளுரை:
வானிலுள்ள இருளைப் போக்கும் வெண்மதியைச் சடையில் தாங்கி, தேன் போன்ற இனிய மொழி பேசும் உமாதேவியைத் தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைச் சரணாக வாழ்பவர்கட்குத் தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாமல் பிறதுணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் எதுவும் இல்லை. 


பாடல் எண் : 02
சேறுபட்ட தண்வயல் சென்று சென்று சேணுலா
ஆறுபட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில் பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே. 

பொருளுரை:
சேறுடைய குளிர்ச்சி பொருந்திய வயல் வளம் பெருகுமாறு, நெடுந்தொலைவு சென்று ஓடிவரும் காவிரி ஆற்றின் துறையில் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாகிய சிவபெருமான், திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர். ஒப்பற்ற அப்பெருமானின் திருவடிகளைப் போற்றுபவர்கள், சிந்தை முதலிய பசுகரணங்கள், பதி கரணங்களாக மாறியவர்களாய், முத்தியின்பம் பெறுவதற்குரிய சிவஞானம் கைகூடப் பெற்றவர்கள் ஆவர்.


பாடல் எண் : 03
தாரமாய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான்
ஈரமாய புன்சடை ஏற்ற திங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை ஆனைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.

பொருளுரை:
தாரமாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். கங்கையைத் தாங்கிய சடை முடியில் சந்திரனையும் சூடியவர். சோழ அரசனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது தொலைந்த இரத்தின மாலையைத் திருமஞ்சன நீரோடு தம் திருமார்பில் ஏற்றவர். திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை அன்புடன் வணங்குவார்களின் தீவினைகள் யாவும் நீங்கும். 


பாடல் எண் : 04
விண்ணில் நண்ணு புல்கிய வீரமாய மால்விடை
சுண்ண வெண்ணீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான்
அண்ணல் கண்ணொர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே.

பொருளுரை:
வானில் நண்ணிச்சென்று முப்புரம் எரித்தபோது திருமால் இடபமாகத் தாங்கினான். இறைவன் திருவெண்ணீறு அணிந்தவன். சூலமேந்திய கையினன். மூன்று கண்களையுடைய மூர்த்தியான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்காவைக் கைதொழ எண்ணும் அன்பர்கட்குத் தீமை எதுவும் இல்லை.


பாடல் எண் : 05
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்டசீர்
மைகொள் கண்டன் வெய்ய தீ மாலையாடு காதலான்
கொய்ய விண்ட நாண்மலர்க் கொன்றை துன்று சென்னியெம்
ஐயன் மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

பொருளுரை:
கொடிய பாவமானது விலக வேண்டும் என்று விரும்புகிற அன்பர்களே! தேவர்களைக் காத்து அருள்புரிந்த நஞ்சுண்ட இருண்ட கண்டத்தினனும், வெப்ப மிகுந்த நெருப்பினை ஏந்தி ஆடுகின்ற அன்புடையவனும், அன்றலர்ந்த கொன்றை மலரைக் கொய்து தலையிலணிந்தவனுமான எம் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக.


பாடல் எண் : 06
நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும்
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான்
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்று உடைக் கறைகொள் மிடறன் அல்லனே.

பொருளுரை:
அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத பிறர் நாணத்தக்க நாணமும், பதியை ஓர்ந்து அறிதலும், அறிந்தபின் சார்ந்திருத்தலும், சார்தலினால் மகிழ்ச்சியும், மனத்தை அடக்கி உள்கித் தியானம் செய்தலுமாகிய நன்மையும் உடையவர்களாய், எவற்றையும் பொருட்படுத்தாத வீரியமும் கொண்ட அடியவர்கள் கொண்டாடிப் பேசத்தக்க தன்மையை உடைய, சிவபெருமான் ஆணும், பெண்ணும் சேர்ந்ததாகிய அர்த்தநாரித் திருக்கோலத்தில் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாய் மூன்று கண்களையுடையவராய் விளங்குபவர் அல்லரோ?.


பாடல் எண் : 07
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள்
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செஞ்சடை
ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்மினே.

பொருளுரை:
காலை, மாலை, நண்பகல் முக்காலங்களிலும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள் ஒன்று கூடி, இறைவனின் திருநாம மகிமைகளையும் திருத்தலங்களின் சிறப்புக்களையும், அவன் அருட்செயல்களையும் போற்றிப் பேச விளங்கும் தன்மையன் சிவபெருமான். பூவுலகத்தோரும், விண்ணுலகத்தோரும் கைதொழுது வணங்கக் கங்கையைச் செஞ்சடையில் தாங்கியுள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக.


பாடல் எண் : 08
பொன்ன மல்கு தாமரைப் போது தாது வண்டினம்
அன்னம் மல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்ன வல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்ன வல்லர் மொய்கழல் துன்ன வல்லர் விண்ணையே.

பொருளுரை:
இலக்குமி வீற்றிருந்தருளும் தாமரை மலரில் வண்டினம் ரீங்காரம் செய்யவும், அன்னப் பறவைகள் வைகும் குளிர்ந்த நீர்நிலைகளின் துறைகலை உடைய திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை நான்கு வேதங்களிலுமுள்ள பாடல்களைப் பாடி, அவன் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கள் இப்பூவுலகின்கண் குறைவற்ற செல்வராய்த் திகழ்வதோடு மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.


பாடல் எண் : 09
ஊனொடு உண்டல் நன்றென ஊனொடு உண்டல் தீதென
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்
வானொடு ஒன்று சூடினான் வாய்மையாக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.

பொருளுரை:
ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் நன்று என்று சுவை மிகுந்த இறைச்சியைப் படைத்த கண்ணப்ப நாயனாரின் அன்பிற்கும், ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் அபசாரம் அது தீது என மருண்ட சிவகோசரியார் அன்பிற்கும் கட்டுண்ட தன்மையினனும், பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, சத்தியப் பொருளாக என்றும் நிலைத்து நின்று, பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப் படுகின்றவனுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தைச் சார்ந்து அவனை வழிபட்டு உய்யுங்கள்.


பாடல் எண் : 10
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும்
மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்
தையல் பாகம் ஆயினான் தழலது உருவத்தான் எங்கள்
ஐயன் மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

பொருளுரை:
கையில் உணவு வாங்கி உண்ணும் சமணரும், கடுக்காய்களைத் தின்னும் புத்தர்களும், மெய்ப்பொருளாம் இறைவனை உணராது பொய்ப்பொருளாம் உலகியலைப் பற்றிப் பேசுபவர்களாய் வேதநெறியை அறியாதவர்கள். எனவே அவர்களைச் சாராது, உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும், நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியை உடையவருமான எங்கள் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து அவரை வழிபட்டு உய்யுங்கள்.


பாடல் எண் : 11
ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்று வானொடும்
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை
காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

பொருளுரை:
ஊழிக்காலந்தோறும் உயிர்களுக்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைக்கின்ற பிரமனும், திருமாலும் இறைவனின் முடியையும், அடியையும் தேடிச்சென்றும் காண்பதற்கு அரிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானைச் சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை மண்ணில் நல்ல வண்ணம் வாழக் கற்று ஓதவல்லவர்களின் கொடிய வினையாவும் மாய்ந்தழியும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||